சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் முக்கிய சுற்றுப்பயணமாக நாளை (ஏப்ரல் 10) இரவு சென்னை வருகிறார். அவரது இந்த பயணம், தமிழக பாஜகவிலும், அதிமுகவுடனான எதிர்காலக் கூட்டணியும் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்க உள்ள அமித்ஷா, நாளை மறுநாள் பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின் போது, மாநில பாஜக தலைவர் பதவியில் மாற்றம், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து உரையாடப்படும் எனத் தெரிகிறது.
அண்ணாமலை பதவி மாற்றம் பரிசீலனையில்
மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் அணுகுமுறையில் அதிமுக கட்சி இருந்துவரும் அதிருப்தி காரணமாக, அண்ணாமலையை மாற்றும் பரிந்துரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வாயிலாக அமித்ஷாவிடம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பாஜக மேலிடம் தற்போது புதிய தலைவர் தேர்வை பரிசீலித்து வருகிறது.
தலைவருக்கான புதிய பெயர்கள்
புதிய தலைவருக்கான போட்டியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மகளிர் மோர்ச்சா தலைவர் வானதி சீனிவாசன், மற்றும் மாஜி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
அண்ணாமலை தாம் மீண்டும் மாநிலத் தலைவராக வரக்கூடாது என்பதை நேரடியாக தெரிவித்ததனால், புதிய தலைமையுடன் பாஜக நகரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அமித்ஷா – குருமூர்த்தி சந்திப்பு
இந்நிலையில், அமித்ஷா நாளை பிற்பகல் மூன்று மணிக்கு தமிழக அரசியல் ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமான குருமூர்த்தியுடன் தனிப்பட்ட சந்திப்பு நடத்த உள்ளார். இதில், தமிழக அரசியல் நிலவரம், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது, மற்றும் பாஜக தலைமை மாற்றம் ஆகியவை பற்றியும் ஆலோசனை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக – பாஜக மீண்டும் ஒன்றா?
2023-ல் இரு கட்சிகளும் முற்றிலும் விலகிய நிலையில் இருந்தாலும், கடந்த மாதம் 25ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சில அதிமுக தலைவர்கள் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது, மீண்டும் கூட்டணி அமைக்கப்படும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
இது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இரு கட்சிகளும் வலுவான அணியாக புனரமைக்கப்படலாம் என்பதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
0 Comments